சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிராமப்புறப் பள்ளிகளையும், அங்கு மாணவ-மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகளையும் ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். திருக்கனூரை அடுத்த கொடாத்தூர் அரச நடுநிலைப் பள்ளி, கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பெருநிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதேபோல மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சுவைத்துப் பார்த்த அவர், தான் அண்மையில் கூறியிருந்த சிறுதானிய உணவு வகை மாணவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெண்களுக்காக சமீபத்தில் ஒதுக்கப்பட்ட வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று மாணவியர்களை சந்தித்தேன். அங்கே வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவிகளின் குறைகளை கேட்டறிந்தேன். இறுதியாக பள்ளியின் கழிப்பறைகளையும் சென்று பார்வையிட்டேன். இது சில நேரங்களில் நம் கவனத்தில் இருந்து தப்பி விடுகிறது.

