பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். இதற்கான விழாவில் பங்கேற்ற அவர், “‘அன்பு தமிழக சொந்தங்களுக்கு வணக்கம்” என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”நன்னாளான ராமநவமி தினத்தில் நீங்கள் அனைவரும் ஜெய் ஶ்ரீராம் என கூறுங்கள். தமிழகத்தின் சங்க கால இலக்கியங்களில்கூட ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் ராமநவமி தின வாழ்த்துகள். இன்று ராமநாதசுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்தபோது நல் ஆசி கிடைத்தது. அதன் பயனாகவே தமிழ்நாட்டில் 8300 கோடி சாலை திட்டங்களை துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் பிறந்த பூமி. ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக இணைந்தது என்பதை அவரது வாழ்க்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.
அதைபோல் ஆன்மிகமும் தொழில்நுட்பமும் இணைந்து பயணிப்பதால் 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான பாம்பன் பாலத்தினை அமைத்துள்ளோம். அதனை செய்து முடித்த பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த புதிய பாலத்திற்கான தேவை பல 10 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த பாலத்தின் வழியாக ரயில் மற்றும் கப்பலில் விரைவாக பயணிக்க முடியும். அதன் மூலம் சுலபமான வியாபார தொடர்புகள் கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2 மடங்காக வளர்ந்துள்ளது. நவீன கட்டமைப்புகள்தான் அதற்கு காரணம். சாலை, ரயில், விமான சேவை, குடிநீர், எரிவாயு போன்ற திட்டங்களுக்கான நிதி 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகளே காரணம்.

