முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுக-வுக்கு தலைமையேற்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி வருகிறார். நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை அப்படியே வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது.
அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் செல்லும் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் செல்லாது என பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக நீதிமன்ற உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வர, அவர் தலைமையில் கட்சி இயங்கி வருகிறது.
ஒரு சிலரைத் தவிர கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உட்பட 95 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜக்கையன், முன்னாள் எம்.பியும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலைராஜ், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர்.

