இந்து குடும்பங்களுக்கு மட்டும் தனிப்பட்ட வரி விலக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அசாதுதீன் ஓவைசி, இஸ்லாமியர்களுக்கு அதை கொடுக்காவிட்டால், முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவில், தற்போது பல்வேறு காரணங்களால் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. இருப்பினும், பூர்வீக வீடு, நிலம் போன்ற பூர்வீகச் சொத்துகள் இருப்பதால், இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
அதாவது, ஒருவர் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறாரோ அது வருமான வரி விலக்கு வரம்புகளில் வராதபோது உரிய வரியை செலுத்த வேண்டும். அதே நேரத்தில், கூட்டுக் குடும்பச் சொத்து மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு.
இதனால், கூட்டுக் குடும்பமாக வாழும் பலரும் இந்த வரிச்சலுகையை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், பவுத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உண்டு.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்ததால், அவர்களின் வருமானங்களும் மாறுபட்டதாக இருந்தன. இதனால், வரி வசூலிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட ஆங்கிலேயர்கள், ஒரு முழு இந்து கூட்டுக் குடும்பத்தையும், ஒரே நபராக கருதி, வரி வசூலிக்கத் தொடங்கினர்.
சுதந்திரத்திற்கு பிறகும் அது நீடித்ததோடு, வருமான வரிச் சட்டத்திலும் சேர்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் ஒரு சிலர் மட்டுமே, இந்து கூட்டுக் குடும்ப வரி விலக்கு மூலம் பலனடைந்து வருகின்றனர்.
மேலும் படிக்க:
“பாஜக மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார்” – பாஜக மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில், வருமான வரிச் சட்டத்தில் இந்து கூட்டுக்குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு மதங்கள் ஒன்றிணைந்து வாழும் நாட்டில், ஒரு மதத்தினருக்கு மட்டும் சலுகைகளை வழங்குவது சரியல்ல என்றும், அந்த சலுகையை நீட்டிக்க விரும்பினால், இஸ்லாமிய குடும்பங்களுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.
.
