சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழ்நாடு அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. 2011-15ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி என வழக்கு தொடரப்பட்டிருந்தது. விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.

