மகாராராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பாலுபாவ் தநோர்கர் (Balubhau Dhanorkar). கடந்த மக்களவை தேர்தலின்போது, சந்திராப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். சிறுநீரக கோளாறு காரணமாக பாலுபாவ் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரின் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் விமானம் மூலம் டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
அவருக்கு வயது 48 ஆகும். பாலுபாவ் மறைவுக்கு மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், `இளமையான, துடிப்பான மக்கள் பிரதிநிதியை இழந்துவிட்டோம்’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், `சந்திராப்பூர் போன்ற பின் தங்கிய கிராமப்புற மக்களின் பிரச்னைகளை எப்போதும் தீர்க்கக்கூடியவர் பாலுபாவ்’ என்று நினைவு கூர்ந்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் எம்.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா பா.ஜ.க.தலைவர் சந்திரசேகர் பவன்குலே மிகவும் உணர்ச்சிபூர்வமான நீண்டதொரு இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதில், `மக்களின் பிரச்னைகளை எப்போதும் விழிப்புடன் கவனித்து தீர்க்கக்கூடிய மக்கள் பிரதிநிதியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பாலுபாவ் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இறந்து போன பாலுபாவ் மனைவி பிரதிபா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் 25 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தொகுதி எம்.பி.யும் இப்போது காலமாகிவிட்டார். தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவில் தொடங்கி, கடந்த முறை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்றார்.

