உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமீபத்தில் நிறைவடைந்த மகா கும்பமேளாவில் படகு ஓட்டி குடும்பம் ஒன்று ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு அர்த்த கும்பமேளாவில் படகு ஓட்டுநர்கள் ஈட்டிய வருவாயால் ஈர்க்கப்பட்ட பிந்து மஹாரா என்ற படகோட்டி, இந்த மகா கும்பமேளாவில் புதிய தொழில் முனைவை தொடங்கினார்.
45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக பிந்து மஹாரா 70 படகுகளை தயாரித்து இயக்கினார். படகுகள் வாங்குவதற்காக வங்கிக் கடன், நகை அடமானம் என பல நிதி ஆபத்துகளை எடுத்ததாகவும், மில்லியன் கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் இறங்கியதாகவும் பிந்து கூறினார்.
பிந்துவின் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். பக்தர்களுக்கு படகு சவாரி, புனித நீராடல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இவரது குழு வழங்கியது. உள்ளூர் வணிகத்தை ஆதரித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பிந்துவின் வெற்றியைப் பாராட்டி உத்தரபிரதேச சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் யோகி, “ஒரு படகோட்டி குடும்பம் மகா கும்பமேளாவில் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளனர். அதாவது ஒரு படகு ரூ.23 லட்சம் சம்பாதித்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.50,000 முதல் ரூ.52,000 வரை வருமானம் ஈட்டியுள்ளனர்” என்றார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கை கடினமாக இருந்ததாகவும், படகுகளை கட்டுவதற்காக கடன் வாங்கியதாகவும் பிந்து தெரிவித்தார். “ஆறு மாத கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. மகா கும்பமேளாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஏற்றிச் சென்ற எங்கள் படகுகள் இனி மறக்க முடியாதவை” என்றார்.
தொடர்ந்து பேசிய பிந்து, “பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி தலைமையில் மகா கும்பமேளா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பிரயாக்ராஜ் உலகளவில் பிரபலமாகியுள்ளது. எங்கள் வியாபாரம் செழித்துள்ளது. நாங்கள் பணத்தை மட்டுமல்ல, மக்களின் ஆசிகளையும் பெற்றுள்ளோம்” என்றார்.
பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைந்த மகா கும்பமேளாவில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.



🌺🌺🌺🌺🌺🌺 கமெண்ட் செய்ய விரும்பவில்லை 🌲🌲🌲🌲