பீகாரில் ஒன்று கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள்!
மத்தியில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை 2024-ல் வீழ்த்த வியூகம் அமைக்கும் விதமாக பீகாரின் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெறும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா, ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக `மத்திய அரசின் அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்த்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்பேன் என நிபந்தனை முன்வைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், `அவசரச் சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு முடிவெடுக்கப்படும்’ என்று கார்கே கூறிய பிறகு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இன்னொருபக்கம், அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாகப் போராடி வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புவதாக மம்தா நேற்று கூறியிருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

