தமிழ் இயக்குநர் அட்லீ குமார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கியிருக்கும் படம் ஜவான். இதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர் 7) திரைக்கு வர இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.
தணிக்கை சான்றிதழ்:
ஜவான் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 49 நிமிடங்கள் படத்தின் நீளம். இந்த படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கலாம் என்ற வகையில் தணிக்கை துறையினர் இதற்கு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளனர். இந்த படத்தை பார்த்தவர்கள் சிலர் சினிமா படம் நன்றாக இருக்கிறது என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் எப்படி..?
ஜவான் படத்தை பார்த்த தணிக்கை துறையினர், படத்தில் புல்லரிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சினிமா வட்டாரத்தை சேர்ந்த சிலர் டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், ஜவான் படம் வெளியாகும் போது பாக்ஸ் ஆஃபிஸில் சுனாமியே ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பதான் சாதனையை முறியடிக்குமா..?
கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 1000 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்தது. இந்த வசூல் சாதனையை ஜவான் முறியடிக்கும் என்று கூட சில ரசிகர்கள் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். பதான் படம், பான் இந்திய அளவில் வெளியாகும் திரைப்படமாக இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
படக்குழு:
ஜவான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி இதில் வில்லனாக வருகிறார். பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படிகோன் ஜவான் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர், இதில் ஷாருக்கானின் தாயாக வருகிறார்.
விஜய் இருக்கிறாரா..?
ஜவான் படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே, நடிகர் விஜய் இப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக பேசப்பட்டது. இப்படத்தின் பிரிவ்யூ சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் அதில் விஜய்யின் முகம் எங்கும் தென்படவில்லை. அட்லீ-விஜய் ஆகிய இருவருமே திரைத்துறையில் நல்ல நண்பர்களாக விளங்குகின்றனர். அட்லீ, தன் படத்தில் நடிக்க கூறி விஜய்யிடம் கேட்டிருக்கலாம் எனவும் அதை மறுக்காமல் விஜய் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விஜய்யின் கேரக்டர் இதுதான்..!
ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ கதாப்பாத்திரம் குறித்த தகவலை, சினிமா வட்டாரங்களில் உள்ள சிலர் வெளியிட்டிருந்தனர். அதில் விஜய்யின் பெயர் மற்றும் அவர் ஜவான் படத்தில் எத்தனை நிமிடங்கள் வருகிறார் போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி, ஜவான் படத்தில் விஜய்யின் பெயர், “தர்மேஷ்வர்” என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் காட்சி 1 நிமிடம் அளவிற்கு இடம் பெற்றுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். ஜவான் படத்தில் விஜய் இருக்கிறாரா இல்லையா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்.

