ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்திருந்தது. பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, இது 1978 இல் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு தயாரிப்பான Dassault Falcon 10 ஜெட் விமானம் , மேலும் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குப் பயணித்த ஒரு ஆம்புலன்ஸ் விமானம் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

