Last Updated:
மேற்கு வங்கம் மாநிலத்தில் நிவாரணம் வழங்கச் சென்ற பாஜக எம்.பி. காகன் முர்மு மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதியை ஆய்வு செய்யச் சென்ற பாஜக எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கூச்பெஹார், ஜல்பைகுரி, மேற்கு மிதினாப்பூர், 24 வடக்கு பர்கானாஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கடைகள், வாகனங்கள், மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த வீடுகளும், கடைகளும் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று டார்ஜிலிங்கின் துதியா பகுதியில் பாலசன் ஆற்றின் குறுக்கே உள்ள இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், சிலிகுரி – மிரிக் இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதியை ஆய்வு செய்யச் சென்ற பாஜக எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் நகர்கடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மால்டா வடக்கு தொகுதி பாஜக எம்.பி. காகன் முர்மு, சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கோஷ் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில், எம்.பி. காகன் முர்முவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோன்று சங்கர் கோஷும் காயமடைந்தார். மேலும், எம்.பி. மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சென்ற காரும் சேதப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திரிணமுல் காங்கிரசாரே காரணம் என்று பாஜக சாடியுள்ளது.
October 06, 2025 9:18 PM IST
மேற்கு வங்கத்தில் பாஜக எம்பி மீது கொடூர தாக்குதல்; நிவாரணம் வழங்கச் சென்ற இடத்தில் நடந்த துயரம்

