இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இணையப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.
இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம்.
