கடவுள் வரமாக தந்த தலைவர் என்றும் கங்கையின் மகன் என்றும் தம்மை கூறி வந்த பிரதமர் மோடி, பயாலஜிக்கலாக தாம் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
மக்களவை தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி ஆற்றி வரும் பேச்சுக்களும் கருத்துக்களும் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் மாறியுள்ளன. மதவெறுப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் விதமாக பிரதமர் மோடி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான் என கூறினார். பத்ராவின் பேச்சுக்கு கண்டனங்கள் எழ, தான் வாய் தவறி கூறிவிட்டதாகவும், அதற்காக வருந்துவதாகவும் கூறினார். 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நியூஸ் 18 நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டிளித்தார். அப்போது, தொடர்ந்து சோர்வடையாமல் பணியாற்றுவது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தான் மனிதப் பிறவி அல்ல என்றும் தன்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றும் கூறி உள்ளார்.
ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, ஒரு கருவியாக கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பி உள்ளதாகவும் மோடி கூறியிருந்தார்.
தாம் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது என்றும் அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் தன்னை பற்றி பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை – பிரதமர் மோடி
வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக வாரணாசி கங்கை நதியில் நீராடி பூஜை செய்த பிரதமர் மோடி, தான் கங்கை நதியை தாயாக பார்ப்பதாகவும், தன் தாயின் இழப்பிற்கு பிறகு கங்கைத் தன்னை மகனாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் உணர்ச்சி மிகுந்து பேசியிருந்தார்.
இதேப்போல் கடந்த மாதம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மோடி, மக்களுடன் தொடர்புகொள்வதில் தாம் வல்லவன் என்பது முதலில் தெரியாது என்றும் கால போக்கில் மக்களின் கடிதங்கள் மூலமே அதை அறிந்துக்கொண்டதாகவும் கூறினார். அந்த திறமையை நன்றாகப் பயன்படுத்துவோம் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டதாக குறிப்பட்டிருந்தார்.
.
