சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்றுடன் (ஆக.28) செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் கோர முடியாது என்றும், ஜாமீன் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.

