இந்த நிலையில் மோன்சன் மாவுங்கல்லின் மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி லட்சுமணன், முன்னாள் டி.ஜி.பி சுரேந்திரன் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அனூப் என்பவர் கிரைம் பிரான்ச் போலீஸில் அளித்த புகாரில் மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடியாக பெற்ற 25 லட்சம் ரூபாயில், 10 லட்சம் ரூபாயை கே.சுதாகரன் வாங்கிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கொச்சியில் வைத்து விசாரணை நடத்த கிரைம் பிரான்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் காங்கிரஸ் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன் கைதுச்செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கே.சுதாகரன் கூறுகையில், “எனக்கும் மோன்சன் மாவுங்கல்லின் மோசடிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை எப்படி குற்றவாளி ஆக்கினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறேன்” என்றார்.
கே.சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, கே.சுதாகரனுக்கும் எனது வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என மோன்சன் மாவுங்கல் தெரிவித்துள்ளார்.

