Last Updated:
கடந்த ஆண்டில் 36 கருணை மனுக்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) சுதாமா குப்தா கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் பெற்றோர் இறக்கவில்லை, உயிருடன் இருக்கின்றனர். மேலும், அவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள எந்த அரசுப் பள்ளியின் கல்வித் துறையிலும் பணியாற்றவில்லை. இந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேலை பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்திருக்கின்றனர். அதில் பெற்றோர்கள் இறந்ததாக போலியாக காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் செய்யப்பட்ட அனைத்து நியமனங்கள் குறித்தும் விசாரணை நடத்த ரேவாவின் பிரிவு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த மோசடியில், 5 குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்களைக் காட்டி மோசடியாக வேலைகளைப் பெற்றுள்ளனர். இதில் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட ஒரு எழுத்தரும் அடங்குவார். தியோந்தர் தாலுகாவில் உள்ள பராசியா கிராமத்தைச் சேர்ந்த சிவசரண் கோலின் மகனான பிரிஜேஷ் கோல் என்ற நபர், தனது தாய் கல்வித் துறையில் பணியாற்றியதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் பொய்யாகக் கூறி, போலி கருணை நியமனம் மூலம் வேலையைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
உதவி ஆசிரியரான தனது ‘தாய்’ இறந்துவிட்டதாகக் கூறி, போலி ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார். கங்கேவ் தொகுதியின் ஜௌடோரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க இந்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி உள்ளார். இதனையடுத்து வழக்கமான சரிபார்ப்பின் போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நியமனம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆட்சியர் பிரதிபா பால் கூறியதாவது, கோலின் போலி ஆவணங்களான இறப்புச் சான்றிதழ்கள், காவல்துறை சரிபார்ப்புகள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் உண்மையானவை என்று தோன்றியது.
ஆனால் முழுமையான ஆய்வின்போது, இது போலியானது என்று தெரியவந்தது என்று கூறியுள்ளார். இந்த மோசடி வெளிவந்த பிறகு, ரேவாவின் பிரிவு ஆணையர், கடந்த மூன்று ஆண்டுகளில் ரேவா, சத்னா, சிதி மற்றும் சிங்க்ரௌலி ஆகிய நான்கு மாவட்டங்களில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த ஆண்டில் 36 கருணை மனுக்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) சுதாமா குப்தா கூறியுள்ளார்.
மேலும் அவர் நியமிக்கப்பட்டவர்களில் 10 பேர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகு, அவர்களில் 5 பேர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது என்றும் கூறியுள்ளார். FIR இன் படி, குற்றம் சாட்டப்பட்ட ஹிராமணி ராவத், ஓம் பிரகாஷ் கோல், சுஷ்மா கோல், வினய் குமார் ராவத் மற்றும் உஷா தேவி ஆகிய 5 பேரும் , கடந்த ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கருணை அடிப்படையில் வேலைகளைப் பெற்றனர்.
June 20, 2025 9:38 AM IST

