சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “இந்தியாவில் இருக்கிற தமிழர்களுக்கும் ஈழ அரசியல்தான் அடையாளம். அடி வாங்கியது தானே தமிழர்களின் வரலாறு, முதன்முதலில் திருப்பி அடித்தது ஈழத்தில்தான்” என்று பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுதான் காரணம். ஹத்ராஸில் கூட நுழைய முடியாத ராகுல் காந்தி, எப்படி இந்தியா முழுக்க பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தினார்? மோடியை வீழ்த்த வேண்டுமென்று அமெரிக்காவும் ஐரோப்பாவும் முடிவெடுத்துவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பாவின் ஆதரவால்தான் ராகுல் காந்தி இந்தியா முழுக்க பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி முடித்தார்” என்றும் கூறியிருக்கிறார்.
வழக்கமாக சீமான்தானே இப்படியெல்லாம் பேசுவார்… என சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய போரே வெடித்திருக்கிறது. பெரியாரிய உணர்வாளர்கள் என்ற கூட்டமைப்பை உருவாக்கி, அதில் நூற்றுக்கணக்கான இயக்கங்களை ஒன்று சேர்த்ததில் முக்கியமானவர் திருமுருகன் காந்தி. ஆனால் அவரே இப்போது ஈழ அரசியல் ஒன்றுதான் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அடையாளம் என முன்னிறுத்துவது, இங்கே இருக்கும் தமிழர்களுக்கு எந்த வரலாறும் இல்லை, எந்த அடையாளமும் இல்லை என்பதாகச் சொல்வதுபோல் இருக்கிறது, திராவிட இயக்கத்தின் அடையாளங்களை நிராகரிப்பதுபோல இருக்கிறது என்று பெரியாரிய செயற்பாட்டாளர்கள் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

