’’அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அதிமுகதான். எதிரிகளை சட்ட நுணுக்கத்தோடு கையாள வேண்டும். கைகோர்த்து செயல்பட்ட எதிரிகள், துரோகிகளை அதிமுக வென்று காட்டியது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்’’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.
உயிரோட்டம் உள்ள அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இனிமேல் அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். அதற்கு நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மதுரையே குலுங்கும் வகையில் மாநாடு நடத்தினோம். அதுகுறித்து விமர்சனம் செய்ய உதய நிதிக்கு தகுதியே கிடையாது. நம்முடைய மாநாட்டை விமர்சனம் செய்த அவர்களால் இளைஞரணி மாநாட்டை நடத்த முடியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்குள் யார், யார் எங்கிருக்க வேண்டுமோ அங்கு இருப்பார்கள். கொரோனா தொற்று காலத்தில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை தீர்க்கமாக சொல்லிவிட்டோம். அதில் இருந்து ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்.
பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இந்தியா கூட்டணி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார்.

