வாக்குப்பதிவு விவரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு விவரங்களை வெளியிட்டதற்கும், வாக்குப்பதிவு சதவிகிதத்தில் மாற்றம் இருந்ததற்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, இரண்டு கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி என அண்மையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில், பொதுவாக தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் மிக தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: இ-பாஸ் இன்றி வரவேற்கும் ஏழைகளின் ஊட்டி… என்ன இருக்கிறது ஏற்காட்டில்?
இதுகுறித்து தேர்தல் ஆணையம் எவ்வித விளக்கமும் அளிக்காதது ஏன்? என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலின்போதே வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுமாறு கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்துவதை பாதிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
.
- First Published :
