மக்களவை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வருகின்ற 8 மற்றும் 9ஆம் தேதி சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது” என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வரவேற்க வேண்டிய செயல் வரவேற்கிறேன்