அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க 3வது முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பணம் வசூல் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைது செய்யப்பட்டபோது
எனவே 3-வது முறையாக ஜாமீன் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் வெளியில் விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை எடுத்து வைத்த வாதத்தை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.


குற்றச் செயலில் ஈடுபட்ட இந்த பத்து ரூபாய் பாலாஜி ஆறு மாதத்திற்கு மேலாக சிறையில் உள்ளார். இவரைப் போன்று குற்றச் செயலில் ஈடுபடுவோர் அனைவரையும் சிறையில் தூக்கி போட வேண்டும்