போபால்: ” ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்ட விரோத அரசியல் ஆகிய ‘4சி’ பார்முலாவில் காங்கிரஸ் செயல்படுகிறது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ம.பி.,யில் அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு யாருடைய ஆட்சி அமையும் என்பதை உங்கள் ஒரு ஓட்டு உறுதி செய்யும். மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகளில் விவசாயிகள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக பா.ஜ., பாடுபட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதெல்லாம் தங்களது குடும்பத்தின் நலனுக்காக உழைத்தது. அதேசமயம் பா.ஜ., மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டது.
இன்று கமல்நாத்துக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் பதில் சொல்ல வேண்டும். 2002ல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறிய போது இங்கு பட்ஜெட் ரூ.23 ஆயிரம் கோடி மட்டுமே . 18 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் தற்போது பட்ஜெட் ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்ட விரோத அரசியல் ஆகிய ‘4சி’ பார்முலாவில் காங்கிரஸ் செயல்படுகிறது. அதனால் தான் மத்தியப் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடர பாஜ.,வுக்கு ஓட்டளிப்பது முக்கியம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

