Last Updated:
பூட்டானில் இருந்து கடத்தி வரப்பட்டு நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்டோருக்கு சொகுசு கார்கள் விற்கப்பட்ட சம்பவத்திற்கு கோவையைச் சேர்ந்த ஒரு கும்பல் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் நாட்டில் இருந்து லேண்ட் ரோவர் உள்ளிட்ட சொகுசு செகன்ட் ஹேண்ட் கார்களை இந்தியாவுக்கு அனுமதியின்றி கடத்தி வந்து கேரளா உள்ளிட்ட இடங்களில் விற்கப்பட்டதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் ஆபரேஷன் நும்கோர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு 39 சொகுசு கார்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீடு மற்றும் கோவை, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தினர். நடிகர்கள் பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கடத்தலுக்கு கோவைதான் தலைமையகம் போல் செயல்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது,
கோவையில் ஷைன் மோட்டார்ஸ் என்ற பெயரிலான நிறுவனத்தில் பங்குதாரர்களாக செயல்பட்டு வரும் சாதிக் பாஷா மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் பூட்டானில் இருந்து பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து உதிரி பாகங்களைப் பிரித்தும், வாகனங்களாகவும் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த கார்கள் விண்டேஜ் எனப்படும் பழைய மாடல்கள் என்பதால் இந்தியாவில் நல்ல மவுசு உண்டு. அதற்கு நல்ல விலை கிடைப்பதால் அவர்கள் கடத்தலில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்துள்ளனர். பூடானில் முன்னாள் ராணுவ அதிகாரியான ஷா கின்லே என்பவர் மூலம் கார்களை வாங்கியதும், 2023,2024 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் பூட்டானில் இருந்து போலி என்ஓசி பெற்று இந்தியாவுக்கு 16 கார்களை கடத்தி வந்துள்ளனர். அந்த வாகனங்களை இந்திய-பூட்டான் எல்லையான ஜெய்காவ்ன் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர்.
அங்கிருந்து இறக்குமதி வரி செலுத்தாமல், கண்டெய்னர்கள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களைக் கடத்தி விற்பனை செய்துள்ளனர். கார்களுக்கான தொகையை ஹவாலா மூலமாக பூடானுக்கு இருவரும் அனுப்பியுள்ளனர். இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட வாகனங்களை, ஓஎல்எக்ஸ் மற்றும் இதர ஆன்லைன் தளங்கள் வழியாக கோவை கும்பல் விற்பனை செய்ததும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமலாக்கத்துறையின் சோதனையில் வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள், வாட்ஸாப் சேட்கள், வங்கி விவரம் மற்றும் வாங்கியோரின் விவரங்கள் சிக்கியுள்ளன. இவற்றின் அடிப்படையில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது.
கார்களைப் பிரித்து உதிரி பாகங்களைக் கழற்றிய பல்வேறு கேரளை ஒர்க் ஷாப்புகளும் விசாரணை வளையத்தில் வந்துள்ளன.பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
October 10, 2025 7:40 AM IST
பூடானில் இருந்து சொகுசு கார் கடத்தி நடிகர்களுக்கு விற்பனை… மூளையாக செயல்பட்ட கோவை கும்பல் – வெளியான புதிய தகவல்

