சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 8 ஓட்டுகள் செல்லும் எனவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

வாக்குச் சீட்டை திருத்திய தேர்தல் அதிகாரி
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரான சண்டிகரில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து இத்தேர்தலில் களம் கண்டன. இந்த இரு கட்சிகளும் இணைந்து 20 வாக்குகளைப் பெற்றன. பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றது. இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மாக்சி, ஆம் ஆத்மியின் 8 ஓட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும், அவர் வாக்குச் சீட்டுகளில் திருத்தம் செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வாக்குச் சீட்டை திருத்திய சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது ஜனநாயக படுகொலை எனவும் குறிப்பிட்டார். மேலும், வாக்குச் சீட்டுகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

பாஜகவின் மனோஜ் சோன்கர் (அமர்ந்திருப்பவர்)
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரியால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லுபடியாகும். தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும்” என உத்தரவிட்டது.
இதற்கிடையே ஏற்கெனவே சண்டிகர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் மனோஜ் சோன்கர் சண்டிகர் மேயராக பதவியேற்றிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கையிலெடுத்த நிலையில், நிலைமை பாதகமாக மாறியதால் பாஜக-வின் மனோஜ் சோன்கர் மேயர் பதவியை நேற்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு சீட்டை நாசம் செய்த அந்த தேர்தல் அதிகாரியின் மீது வழக்கு பதிவு செய்வதோடு விட்டுவிடக்கூடாது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்