உத்திரபிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றிற்கு அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து வருகின்ற 22ஆம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இந்த நூற்றாண்டின் மகத்தான நிகழ்வை தமிழக மக்களும் கண்டு களிக்க வேண்டும். அவர்களும் இறைவனின் அருளை பெற வேண்டும். இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

