கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்குச் சேவையாற்றும் துறை.

அதனால்தான் பிற மாநிலங்களில் கட்டணம் உயர்த்தியபோதும், தமிழ்நாட்டில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதற்கு வழக்கமாக ஒதுக்கப்படுகிற நிதி, ஒதுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அதில் எந்த ஒரு குறையும் இல்லை. கூடுதலாக நிதி ஒதுக்க தேவை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்தப்படும். பஞ்சப்படி உயர்வு கோரிக்கை தொடர்பாக, முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். 2,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான டெண்டர்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்குவதற்கு பணிகள் தொடங்கியிருக்கின்றன. 4-6 மாதங்களுக்குள் புதிய பேருந்துகள் நடைமுறைக்கு விடப்படும்.
பைக் என்பது தனி நபர் பயன்படுத்தக்கூடிய வாகனம். அது இன்னும் வாடகைக்கு விடப்படக்கூடிய வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அதைப் பயன்படுத்தக் கூடாது. காவல்துறையும் பல்வேறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகரில் ஆன்லைன் மூலம் பேருந்து டிக்கெட் பெறுவதற்கான கருவிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வரும். அதன் பிறகு மற்ற இடங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

