மறைமுகமாக திரைப்படங்களை வாங்கி ரிலீஸ் செய்யும் பைரசி வெப்சைட்கள் பல இருந்தபோதும், அவர்களுக்கு மூளையாக செயல்படுபவர் யார்? என்பதுதான் போலீசாருக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. அதற்காக ஒரு தந்திரத்தை மேற்கொண்ட போலீசார், தாங்களும் ஒரு பைரசி வெப்சைட் ஏஜெண்ட் போல நாடகமாடி, ஆன்லைனில் உலவ ஆரம்பித்தனர்.
அப்போதுதான், ஆன்லைனிலேயே படங்கள் ஏல முறையில் விற்கப்படுவதும், அதிக தொகையை யார் கொடுக்க முன்வருகிறார்களோ? அவர்களுக்கு புதுப் படத்தின் HD பிரிண்ட் காப்பி வழங்கப்படும் என்பதும் தெரியவந்துள்ளது.
போலீசாரும் அந்த ஏலத்தில் தங்களை ஒரு ஏஜெண்ட் போல காட்டிக்கொண்டு பங்கேற்றனர். ஒரு படத்தின் பிரிண்ட் 800 டாலர் முதல் ஆயிரம் டாலர் வரை ஏலம் சென்றிருக்கிறது. அதிக தொகை கொடுத்து படத்தை வாங்கிய போலீசார் அந்தப் பணத்தை, மர்மநபருக்கு கிரிப்டோ கரன்சியாக வழங்கியிருக்கின்றனர்.
இருப்பினும் சைபர் கிரைம் போலீசார் உஷாராக கண்காணித்து மர்மநபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். உடனே களத்தில் இறங்கிய போலீசார் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு டூப்ளக்ஸ் வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 21 வயதான அஸ்வனி குமார் என்ற இளைஞரை பிடித்த போலீசார் அவரது அறையை சோதித்து பார்த்தபோது அதிர்ந்து போயினர்.
உள்ளே ஒரு ஹேக்கிங் யூனிட்டையே வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரது வீட்டிலிருந்து கணினிகள், சர்வர்கள் மற்றும் பிற ஹேக்கிங் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பீகாரைச் சேர்ந்த இந்த ஹேக்கர் புதிய திரைப்படங்கள் சுடச்சுட இணையத்தில் ரிலீஸ் ஆகக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய அஸ்வனி குமார் யூடியூப் மூலம் ஹேக்கிங் மற்றும் சர்வர் மேலாண்மை கற்று, திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கி, ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
இவர் இரண்டு முன்னணி டிஜிட்டல் சினிமா விநியோக நிறுவனங்களின் சர்வர்களை ஹேக் செய்து அதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் திருடியிருக்கிறார். சர்வரில் இருந்து படத்தை எடுத்தவுடன் piracy வெப்சைட்களுக்கு ஏல முறையில் அறிவிப்பை வெளியிட்டு, அதிகமாக பணம் தரும் நபருக்கு படத்தை டெலிவரி செய்துவிடுவார்.
பின்னர் அவற்றை டெலிகிராம் மூலம் திருட்டு சிண்டிகேட்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த திருட்டு நெட்வொர்க் இந்தியா முழுவதும் பல்வேறு ஏஜெண்டுகளுக்கு புதிய திரைப்படங்களை குறைந்த விலையில் வழங்கியுள்ளது.
இதனால் திரைப்படத் துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் மூலம் தான் புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி மற்றும் பல்வேறு ஹிந்தி படங்கள் முதல் நாளே HD தரத்தில் இணையதளத்தில் வெளி வந்துள்ளது.
தற்போது வரை மொத்தம் 135 படங்களை திருடி விற்றுள்ள இவர், ஒரு படத்துக்கு 800 டாலர் என்ற கணக்கில் கோடியில் சம்பாதித்து இருக்கிறார். telegram-ல் ஒரு படத்துக்கு 135 டாலர் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை 5 கோடி ரூபாய் வரை பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
வங்கிகள் மூலம் பணத்தை பெற்றால் சிக்கிக்கொள்வோம் எனத் தெரிந்து கிரிப்டோ கரன்சியாக பணத்தை பெற்று போலீசாருக்கு தண்ணி காட்டி வந்திருக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, நாணி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பெரிய நடிகர்களை அழைத்து, எப்படி புதுப்படங்கள் திருடப்பட்டன என்பது குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
October 09, 2025 8:41 PM IST
