பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று மாலை பா.ஜ., ஆதரவுடன் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இவர் பா.ஜ.,வுடன் சேர்வதால் காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி வலு குறைகிறது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி இருந்தது. கூட்டணி அரசில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வுடன் நிதீஷ் குமார் கூட்டணி அமைக்கப் போவதாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இன்று காலை தனது கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் நிதீஷ்குமார் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிதீஷ்குமார் கவர்னர் மாளிகையில் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மாலை பதவியேற்பு
நிதீஷ்குமாருக்கு ஆதரவு வழங்கும் கடிதத்தை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் அக்கட்சி மேலிடம் பெற்றுள்ளது. பா.ஜ., ஆதரவுடன் இன்று மாலை 5 மணியளவில் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.
நிதீஷ் குமார் நிருபர்களுக்கு சந்திப்பில்,”கட்சி தலைவர்கள் ஆலோசனையின் படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அரசியல் சூழல் காரணம் மகாகட்பந்தன் கூட்டணி முறிந்து விட்டது. குழப்பத்தை சரி செய்ய முயற்சித்தும் முடியவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.


அரசியல் என்கிற சாக்கடையில் இதெல்லாம் மிகவும் சாதாரணம்.