டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையின்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் கிளம்பியது. அப்போது, `தேர்தலைக் காரணம் காட்டி பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது சட்டத்தின்படி நடக்கும் சாதாரண மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்” என அமலாக்கத்துறை எதிர்த்தது.

இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றம், ஜூன் 1-ம் தேதிவரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதோடு, `2022 ஆகஸ்ட்டில் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக அவரை கைதுசெய்யாமல் தேர்தல் நேரத்தில் கைதுசெய்தது ஏன்?’ என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியும் எழுப்பியது.
