சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் ‘நாம் இலங்கைப் பிரஜைகள்’ என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.
தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் செயல்படுத்தவும் செயல்திறன் மிக்க, நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் எதிர்பார்த்த மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்.
இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.” என்று அனைத்து துறை சார்ந்த விஷயங்களையும் ஆய்ந்து உரையாற்றியவர், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாகத் தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களைத் தயாரித்து முடித்துள்ளோம். அந்த உருவாக்கத்திற்காகக் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

