‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
பாமகவின் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸுக்கு இடையே கடந்த சில நாள்களாக மோதல் நிலவி வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதனிடையே, ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்திருந்தார்.
சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவ.1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.