பாண்டிச்சேரி : கடந்த 18 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து சாரம் அவ்வை திடலில் சுமார் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டது.
5-வது நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
அந்த சிலைக்கும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி முடிந்து 5-வது நாளில் விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் தனித்தனியாக அந்தந்த பகுதியில் இருந்து சாரம் அவ்வை திடலுக்கு மதியம் கொண்டு வரப்பட்டது. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் மேளதாளத்துடன் தொடங்கியது. இந்த விநாயகர் ஊர்வலமானது காமராஜர் சாலை, காந்தி வீதி அஜாந்தா சந்திப்பு, நேரு வீதி, அருகே ஊர்வலம் வந்தது.
இரு தரப்பினர் இடையே மோதல்
அப்போது முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் தடியடி
அந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா என 7 பேரும் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு கத்திகுத்து காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


அமைதியாக நடக்க வேண்டிய ஊர்வலத்தில் வன்முறை தொடங்கியது மிகவும் வருத்தமான செயல்