அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத் துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவு பெறாமல் நாங்கள் இதில் எப்படி தலையிடமுடியும் என உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கேள்வியெழுப்பியது.
எனினும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை இன்று புதன்கிழமை விசாரிக்க ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் மேகலா தெரிவித்துள்ளார். இதனிடையே அமலாக்கத்துறை தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்றைய தினம் நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் மருத்துவமனையில் இருக்கும் போது காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என அமலாக்கத்துறையினரை பார்த்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்வியாக உள்ளது விசாரணையை தாமதப்படுத்த இவ்வாறு செய்வதாக வாதிட்டார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உடல்நிலை சரியில்லை என மருத்துவ அறிக்கை அளித்த பிறகும் காவலில் எடுக்க கோருகிறீர்களா என்று கேட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை அப்பீல் செய்தது அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி உடல்நிலை சீரடைந்த பின்னர் விசாரணை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது என்றும் கூறினர்.
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் வைத்த கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்தனர். செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதால் அந்த தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

