புதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் முடிவு. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்படும் என காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து காங்., தலைவர் கார்கே கூறியிருப்பதாவது: இன்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். மாவீரர்களின் புண்ணிய பூமியான ராஜஸ்தான் நமது மக்கள் நலத்திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 7 உத்தரவாதங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நன்றி.
மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. நமது சமூக நீதி, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களைக் கண்டு பாஜ., பயப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வெற்று, அபத்தமான, மற்றும் பிளவுபடுத்தும் பேச்சுகளில் மும்முரமாக உள்ளனர், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் 7 உத்தரவாதங்கள் பிடிக்கவில்லை.
இம்முறை பொதுமக்கள் இவர்களின் பொய், ஏமாற்று, வெறுப்பு வார்த்தைகளில் சிக்க மாட்டார்கள். இம்முறை பாரம்பரியம் மாறி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது என ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் (பாஜ.,வினர்) திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் மதச்சார்பற்றவர்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எங்கள் முடிவு. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்படும். இவ்வாறு கார்கே கூறினார்.

