முன்னதாக ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் 53-வது ஆண்டு விழாவான இன்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னையின் பல்வேறு இடங்கள் கண்ணீரில் தத்தளித்தது. வேளச்சேரி, பெருங்குடி, மடிப்பாக்கம், மேடவாக்கம், புளியந்தோப்பு, சோழிங்கநல்லூர், கொளத்தூர், கோயம்பேடு மார்க்கெட் என பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.
ஆனால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எங்குமே தண்ணீர் தேங்கவில்லையென்று பொய்யான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2022-ல், சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட நிற்காது என்று முதலமைச்சரிலிருந்து மேயர் வரை அனைவரும் கூறினார்கள். 2023-லும் அதையே கூறினார்கள். இந்த முறைதான் கூறவில்லை. ஏனென்றால் தண்ணீர் தேங்கிய இடங்களெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது.
