மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த போது, 40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு கொடுத்தனர். அஜித்பவாரின் ஆதரவாளர்கள் 9 பேருக்கு பா.ஜ.க., கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரத்தைத் தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித்பவார் மனுக்கொடுத்தார். அதன் அடிப்படையில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் அணியிடம் ஆதரவாளர்கள் பட்டியலைக் கொடுக்கும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. அவர்கள் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில் அஜித்பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் சரத்பவார் தலைமையிலான அணி தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்று அழைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதோடு சரத்பவார் அணிக்கு வேறு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவார் அணிக்குக் கொடுத்ததை எதிர்த்து சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அம்மனு நிலுவையில் இருக்கிறது. தற்போது அம்மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அஜித்பவாரிடம் இருக்கும் கட்சி சின்னமான கடிகாரத்தை முடக்கவேண்டும் என்றும், அவருக்கு வேறு சின்னம் ஒதுக்கவேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் சரத்பவார் அணி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.
