ஒடிசா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தின் பாஹானாகா பகுதியில், கடந்த ஜூன் 2-ம் தேதி, மூன்று ரயில்கள் அடுத்தடுத்த மோதிக்கொண்ட விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த கோர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 1000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது. ரயிலில் சென்ற தங்கள் அன்புக்குரியவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா எனத் தெரியாமல் பல உறவினர்கள் இன்னும் கவலையுடன் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஹானாகா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாள்கள் நினைவஞ்சலிக் கூட்டம், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நம்பிக்கை பிரார்த்தனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்து முறைப்படி உயிரிழந்தவர்களின் பத்தாம் நாள் நினைவாக பாஹானாகா பகுதி ஆண்கள் பலரும் தங்கள் தலையை மொட்டையடித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

