மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய சென்னை, கரூர் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது திமுக தொண்டர்களுக்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் மத்தியில் ஏற்பட்ட சலசலப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” கடந்த இரண்டு ஆண்டுக்கால விடியா தி.மு.க ஆட்சியில் முதலமைச்சரின் மகனும் மருமகனும் 30,000 கோடி ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாடிய டேப் லீக் ஆனதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்துவரும் துறையில் ஒன்றான டாஸ்மாக் நிறுவனத்திலுள்ள சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பார்களின் லைசென்ஸுகள் புதுப்பிக்கப்படாமல், சட்டத்துக்குப் புறம்பாக அவரின் கரூர் கம்பெனியால் நடத்தப்படுவதாக அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால், தமிழக அரசுக்குக் கோடிக்கணக்கான வரி இழப்பு ஏற்படுகிறது. மேலும், இந்தச் சட்டவிரோத பார்கள் மூலம் கலால் வரி செலுத்தப்படாமல் மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து நேரடியாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுவதாக, அப்போதைய நிதியமைச்சர் பேட்டியளித்திருந்தார். மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்துத் தர வேண்டும் என்று, தாங்கள் கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்களால் வற்புறுத்தப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்களே குற்றம்சாட்டி பேட்டியளித்திருக்கின்றனர். இதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது என்று நாளிதழ்களும் ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
செந்தில் பாலாஜி, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததாகக் கூறியிருக்கிறார். இதே, அ.தி.மு.க நிர்வாகிகள்மீது பொய்யான புகார்கள் புனைந்து தமிழக காவல்துறையால் சோதனைகள் செய்ததையும், அப்போது, கழகத் தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியுடைய வீட்டில் சுவர் ஏறிக் குதித்த தமிழக காவல்துறை நடவடிக்கையை ரசித்தவர்கள்தானே விடியா தி.மு.க ஆட்சியாளர்கள்?
முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகவும் வந்த செய்திகளின் அடிப்படையில் விசாரிக்க, முறையாக வந்த மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை கரூரில் தி.மு.க குண்டர்கள் அடித்து விரட்டியிருக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதலுக்குள்ளான வருமான வரித்துறை பெண் அதிகாரி உட்பட நான்கு பேர், கரூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது, நம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணம்.
மாநில அரசு அதிகாரிகளும் தி.மு.க குண்டர்களால் தாக்கப்படுகின்றனர். இப்போது மத்திய அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்துப் பேட்டியளித்த கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், எங்களிடம் சொல்லாமல் சோதனைக்கு வந்துவிட்டனர் என்று கூறுகின்றனர். நடந்த அனைத்தையும் ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்கி, தன்னை அதிமேதாவி என்று காட்டிக்கொள்ளும் ஆலந்தூர் பாரதி திருடர்களும், கொள்ளையர்களும் இரவில்தான் வீடு புகுவார்கள், அதுபோல் வருமான வரித்துறையினர் இரவில் புகுந்ததாக சொல்கிறார்.
ஆலந்தூர் பாரதி தமிழ் நாட்டில் திருடர்களும், கொள்ளையர்களும் இரவில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறாரா? மேலும், முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளபோது, வருமான வரி சோதனை நடத்துவது சரியல்ல என்றும் கூறியிருக்கிறார். முதலமைச்சருக்கும், வருமான வரித்துறைக்கும் என்ன சம்பந்தம்? 2006-2011 காலக்கட்டத்தில், மத்தியில் ஆண்ட காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியின்போது, கலைஞர் டி.வி-யில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தவில்லையா? அதை, அப்போதைய தமிழக ஆளும் கட்சியான மைனாரிட்டி தி.மு.க அரசு, மடியில் கனமிருந்தால், வழியில் பயந்துதான் ஆக வேண்டும் என்ன சொன்னது?

