பண மோசடி செய்ததாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு இந்திய நிதி கண்காணிப்பு அமைப்பு (எப்ஐயு-ஐ) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.

பேடிஎம்
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களை தவறாக பயன்படுத்தி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கியது. இதையடுத்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, மார்ச் 15ம் தேதி முதல் தனது கணக்குகளில் புதிதாக வைப்புத் தொகை பெறுவதற்கும், பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடைவிதித்தது.
இதனால் வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக்குகள் போன்றவை தொடர்ந்து செயல்படும் வகையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, தனது நோடல் கணக்கை ஆக்சிஸ் வங்கியுடன் இணைத்தது.

இந்திய நிதி கண்காணிப்பு அமைப்பு (எப்ஐயு-ஐ)
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ஈடுபட்டதாக மத்திய விசாரணை அமைப்புகளிலிருந்து எப்ஐயு-ஐ-க்கு தகவல் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் எப்ஐயு-ஐ, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும், இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாகவும் எப்ஐயு-ஐ தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எப்ஐயு-ஐ ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.

அபராதம்
இதுகுறித்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஒரு வணிகப் பிரிவில் உள்ள பிரச்சினை தொடர்பாக தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த பிரச்சினையைத் தொடர்ந்து, எங்கள் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் எப்ஐயு-ஐ-க்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வழிமுறைகளை மேம்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

