புதுச்சேரி : புதுச்சேரியில் விற்பனை செய்ய கஞ்சா, போதை ஸ்டாம்ப், கிரிஸ்டல் மெத்தடைமன் உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்த கேரள வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி ரெஸ்டோ பார்களில் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த கும்பலை சில தினங்களுக்கு முன் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகர பகுதி போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதில் நேற்று முன்தினம் பழைய பஸ் நிலையம் பின்புறம் பில்லுக்கடை சந்திப்பு அருகே நின்றிருந்த இரு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தனசேகரன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர்.
கேரள மாநிலம், கோட்டையம் அடுத்த கஞ்சரம், அஸ்வின் சாம்வேல் ஜோகன், 22; கொல்லம், பூயப்பள்ளி, சாருவிலா ஜிஜோ பவன், ஜிஜோ பிரசாத், 23; என தெரியவந்தது.
அவர்களை சோதனை செய்ததில், 20 கிலோ கஞ்சா, 1 கிராம் கிரிஸ்டல் மெத்தடைமன், 4 கிராம் சரஸ், 46 எல்.எஸ்.டி. என்கிற போதை ஸ்டாம்ப் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சம்.
இவர்கள், புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும், அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காக வெளிமாநில புரோக்கர்கள் மூலம் சரஸ், கிரிஸ்டல் மெத்தடைமன், போதை ஸ்டாம்ப்கள் வங்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும், இருவரும் புதுச்சேரியில் வசிக்கும் கேரள மாநில நண்பர்களின் நெட்வொர்க் மூலம் புதுச்சேரி இளைஞர்கள், ரவுடிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கஞ்சா சப்னை செய்து வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடம் கஞ்சா ஆர்டர் கொடுத்த புதுச்சேரி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சரஸ்
முதிர்ந்த கஞ்சா செடியில் வடியும் பிசின் தான் சரஸ் எனும் போதைப் பொருள். இது வடமாநிலத்தில் எளிதாக கிடைக்கும். அதிக போதை தரக்கூடியது.
கிரிஸ்டல் மெத்தடைமன்
வேதியியல் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் போதைப் பொருள். வெளிர் மஞ்சள் நிறத்தில் நொறுக்கிய கற்கண்டுகள் போல இருக்கும். இவை கிராம் ரூ. 5000 முதல் ரூ. 8000 வரை விற்பனை செய்கின்றனர்.
எல்.எஸ்.டி. ஸ்டாம்ப்
எல்.எஸ்.டி. (லைசர்ஜிக் ஆசிட் டர்திலாமைடு) வௌிநாடுகளில் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகிறது. இவை இந்தியாவிற்குள் கடத்தி வந்து பல்வேறு மாநிலங்களில் ரூ4,000 முதல் 5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

