பில்கிஸ் பானு வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உச்சநீதிமன்றம் நேற்று (8.1.2024) அளித்த இரண்டு முக்கிய தீர்ப்புகள் என்பது அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை சரியாக அமலாக்கும் வரலாற்றுச் சிறப்புமிகுந்தவை ஆகும்!பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்பது காவி பா.ஜ.க. ஆட்சிக்குக் கிடைத்த சாட்டையடியாகும். இரண்டாவது EWS என்று கூறப்படும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற அசல் அநியாயமான ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தையே அடியோடு தகர்ப்பதாகும்.
நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளை சரிவர பயன்படுத்த வாய்ப்பளிக்காமல், ஒரே வாரத்தில் இரண்டு திருத்தங்கள், முதலில் அவசரக் கோல அபத்தம் – இரண்டாவது அந்தத் திருத்தத்திற்கு மற்றொரு திருத்தம் என்று முறையே 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், 105 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ற பெயரால், திணிக்கப்பட்டதே இந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. மற்ற இட ஒதுக்கீடுகளுக்கு Quantifiable Data உள்ளதா? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த 10 சதவிகித (EWS) இட ஒதுக்கீட்டின் தேவைக்கு அந்தப்படி எந்தப் புள்ளிவிவரமும் இல்லாதபோதும், அதற்கு மட்டும் அதாவது உயர்ஜாதிக்கு இட ஒதுக்கீட்டில் மட்டும் அதை கேட்கவே இல்லை. அப்படியும் 5 நீதிபதிகளில் 3 பேர் ஒரு நிலைப்பாடு, 2 பேர் மாறுபட்ட நிலைப்பாடு என்று எழுதியும் அதிலும் உயிர் கொடுக்கப்பட்டது.

