ஒரு கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றால் முதலில் கனிவும் துணிவும் இருக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை அன்னமிட்டே வளர்த்தார். பள்ளியிலும் பந்தி வைத்த கட்சி. ஆலயத்திலும் அன்னமிட்ட கட்சி. அதை மறந்து தன் தொண்டர்களுக்கு புளியோதரை போட்ட எடப்பாடியால் எப்படி கட்சியை வளர்க்க முடியும். இதன் மூலம் அவர் தனது தரத்தை காட்டியிருக்கிறார். வந்த தொண்டர்களும் அதனை புரிந்து கொண்டு சென்றிருக்கிறார்கள். மதுரை மாநாடு புளியோதரை மாநாடு என்றும், எடப்பாடி பழனிசாமி இனி புளியோதரை சாமி என்றும் அழைக்கப்படுவார்.
நீதிமன்ற முன்னெடுப்புகள் என்பது ஒரு சம்பிரதாய சடங்கு. அது ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். ஒரு பொதுக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியை முன்வைத்துத்தான் அதிமுக என்ற கட்சியே உதயமானது. அந்த நேரத்தில் மக்கள் தான் அந்தக் கட்சியை தூக்கிப் பிடித்தார்கள். அதேபோன்று இப்போதும் ஒரு பொதுக்குழுவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த அநீதிக்கு எதிராகவும் மக்கள் தான் எங்களை தூக்கிப் பிடிப்பார்கள். அவர்களின் ஆதரவை துணையாக கொண்டு நாங்கள் வளர்வோம். அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டுவோம்” என்றார் அவர்.
ஓபிஎஸ்ஸின் தென் மண்டலத்தில் மாநாடு கூட்டி தனது செல்வாக்கை நிலைநிறுத்தி இருக்கிறார் ஈபிஎஸ். இதற்குப் போட்டியாக ஈபிஎஸ் தரப்புக்கு செல்வாக்குள்ள காஞ்சிபுரத்திலிருந்து அடுத்த மாதம் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் ஓபிஎஸ். அவரது செல்வாக்கையும் பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது தமிழகத்து அரசியல் அரங்கு!
இதற்கு நடுவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்திருக்கிறது. இதற்கும் வெற்றிக்கொண்டாட்டம் போடுகிறது ஈபிஎஸ் தரப்பு.

