டெல்லியில் அடுத்த மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி 20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
ஜி20 மாநாட்டின் அரங்கில் வைப்பதற்காக பிரமாண்டமான நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாதரசம், இரும்பு, ஜிங் உள்ளிட்ட எட்டு பொருட்களின் கலவையில் வெண்கலத்தாலான 28 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 19 டன் எடை கொண்ட இந்த சிலை தான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது. ரூ.10 கோடி மதிப்பிலான இந்த சிலையை சுவாமிமலையைச் சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன்கள் ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த சிலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடைபெற உள்ள டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. இதுபற்றி ஸ்ரீகண்டஸ்தபதி, ”இந்த சிலையை சிதம்பரம் கோனரிராஜபுரம் ஆகிய ஊர்களில் உள்ள நடராஜர் மற்றும் பிற சோழர் கால நடராஜர் சிலைகளை அடிப்படையாக வைத்து வடிவமைத்துள்ளோம்” என்றார்.

