
ஆவடி: சென்னை, அம்பத்தூர் அருகே கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (24). தனியார் நிறுவன பொறியாளரான இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்கள் இருவருடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை- மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள துரித உணவகத்துக்கு உணவு அருந்த சென்றார். அப்போது அங்கு மது போதையில் உணவு அருந்த வந்த 4 பேருக்கும், பாலச்சந்திரன் தரப்பினருக்கும் இடையே வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டது.
அப்போது, 4 பேரும், பாலச்சந்திரனையும் அவரது நண்பர் முகேஷையும் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த பாலச்சந்திரன், முகேஷ் இருவரும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே பாலச்சந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது. முகேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

