தூத்துக்குடி பா.ஜ.க மாவட்ட கட்சி அலுவலகத்தில் மண்டலத் தலைவர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். முன்னதாக தூத்துக்குடியிலுள்ள உலகப் பிரசித்திப் பெற்ற பனிமய மாதா பேராலயத்துக்குச் சென்று மெழுகுவத்தி ஏந்தி வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகா காங்கிரஸ், தேர்தல் அறிக்கையில் மேக்கேதாட்டூ அணைக் கட்டப்படும் எனக் கூறியிருப்பது தெரிந்தும், தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

மேக்கேதாட்டூ அணை கட்டப்படும் எனப் பெயரளவில் மட்டும் அவர்கள் குறிப்பிடவில்லை. நேற்று நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளிடமும் மேக்கேதாட்டூ அணை கட்டத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இதற்கு எதிராக தமிழக அரசு எந்தவிதக் குரலையும் எழுப்பாமல் இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தமிழக முதல்வரிடமிருந்தோ, தமிழக காங்கிரஸ் கட்சியிடமிருந்தோ எந்தக் கருத்தும், கண்டனமும் வரவில்லை.
முல்லைப் பெரியாரிலும் இதே பிரச்னைதான் நடந்தது. தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் தொடர்ந்து விட்டுக்கொடுத்து வருகிறார். அவர்களால் முடியவில்லை என்றால், மேக்கேதாட்டூ அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது. இதற்காக மேக்கேதாட்டூவை நோக்கி தமிழக பா.ஜ.க சார்பில் நடைப்பயணம்கூட நடத்தத் தயாராக இருக்கிறோம். கவர்னர் அழைத்திருக்கும் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்ளக் கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.

துணைவேந்தர்களை கவர்னர் சந்தித்துப் பேசுவது எப்போதும் நடைபெறும் நிகழ்வுதான். தற்போது அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்களின் மனப்பான்மையால் பத்தாம் வகுப்பில் 36,000 மாணவர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர். இதே மனப்பான்மையில் இருந்தால், அடுத்த ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தூத்துக்குடி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீட்டைக் கொண்டுவர வேண்டும்.
தென்மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால் பாதிப்புகள் தொடங்கிவிட்டன. தாமிரம் ஏற்றுமதி செய்துவந்த நிலை மாறி, தற்போது இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்திருக்கிறோம். தாமிரத்துக்காக சீனாவை நோக்கி கைகட்டி நின்றுகொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் ஆக்கபூர்மான பணிகளைச் செய்யும் அமைச்சர்கள் இல்லை. தொழிற்சாலைகளுக்குச் சலுகைகள் வழங்கி நிலைத்திருக்க வைக்க வேண்டும். தமிழகத்திலுள்ள பல பெண்கள் தாலியை இழப்பதற்குக் காரணமாகி வரும் மதுவின் மூலமாக ஊழல் செய்துவரும் அமைச்சர்களை கர்மா ஒருபோதும் விட்டுவைக்காது.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள். அவர்களிடம் தைரியம் கிடையாது. தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் மட்டும் 22 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.1,400 கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார். தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும் ஜூலை 9-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறேன். அப்போது தி.மு.க அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.

