மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தெட் மாவட்டத்தில் சங்கர்ரோ சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நாந்தெட் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் இறந்த 24 பேரில், 12 பேர் பெரியவர்கள். இவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். சிலர் பாம்பு கடி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகளும், 6 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
70 முதல் 80 கிமீ சுற்றளவில் இதுபோன்ற மருத்துவமனை இதுஒன்று தான் உள்ளது. அதனால் வெகுதொலைவில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெறுவார்கள். கடந்த சில நாட்களாக நோயாளிகளின் வருகை அதிகளவு உள்ளது. இது சிக்கலை ஏற்படுத்தியது.
ஹாஃப்கைன் என்ற நிறுவனம் உள்ளது. அவர்களிடம் இருந்துதான் மருந்து வாங்க வேண்டும். ஆனால் அங்கிருந்து வாங்க முடியவில்லை என்பதால் உள்ளூரில் இருந்தே மருந்துகளை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கினோம். மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மருத்துவமனையில் என்ன நடைபெற்றது என்ற விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்..
மகாராஷ்டிராவில் உள்ள எதிர்க்கட்சிகள் மாநிலத்தில் உள்ள ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தின் மீது முழு தாக்குதலைத் தொடங்கி, “டிரிபிள் இன்ஜின் சர்க்கார் (பாஜக, ஏக்நாத் ஷிண்டே சேனா மற்றும் என்சிபியின் அஜித் பவார் பிரிவு) பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினர். “மொத்தம் 24 உயிர்கள் பலியாகியுள்ளன. எழுபது பேர் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர்.
மருத்துவ வசதிகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. பல செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு மாற்று வழங்கப்படவில்லை. பல இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. மருத்துவமனையின் திறன் 500, ஆனால் 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான் அஜித் பவாரிடம் (இது பற்றி) பேசுவேன். அரசாங்கம் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும்” என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தவருமான அசோக் சவான் இன்று மருத்துவமனைக்குச் சென்ற பிறகு கூறினார்.

