டோக்கியோ, ஜப்பான் நாட்டில் நேற்று 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் ஆட்டம் கண்டன. அதிகபட்சமாக, 7.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், 4 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கின. தொடர் அதிர்வுகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிழக்காசிய நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் நேற்று பிற்பகலில், 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மேற்கு கடலோரத்தில் உள்ள நோடோ, இஷிகவா மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து, 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டன. குறைந்தபட்சம் 4 ரிக்டர் அளவுக்கு பதிவானது.
அறிவுறுத்தல்
இதனால் குடியிருப்புகள், முக்கிய சாலைகள், தொழில் நிறுவன கட்டடங்கள் ஆட்டம் கண்டன. ‘இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 15 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகலாம்’ என, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதனால், கடலோர பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி உயரமான பகுதிகளுக்கு சென்றனர். நிலநடுக்கத்தின் போது அலுவலகம், உணவகம் போன்ற இடங்களில் இருந்தவர்கள் பீதியுடன் மேஜைகளுக்கு கீழே பதுங்கிக் கொண்டனர். அந்த ‘வீடியோ’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவின.
புத்தாண்டை முன்னிட்டு ஜப்பானில் நேற்று பொது விடுமுறை என்பதால் லட்சக்கணக்கானோர் வழிபாட்டு தலங்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்றனர். இந்நிலையில், இஷிகவாவில் உள்ள பிரபல ஆன்மிக தலமான கனசாவாவில் உள்ள கோவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்தது. அதன் புராதன கல் நுழைவாயில்கள் இடிந்து விழுந்தன. இங்கு வந்திருந்த சுற்றுலா பயணியர் உடனே வெளியேறி, வெட்ட வெளிகளில் குவிந்தனர்.
ஜப்பானின் பேரிடர் மீட்பு படையினர், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வீடுகள், கடைகள், அலுவலகங்களில் இருந்தவர்களுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், இஷிகவாவை ஒட்டியுள்ள வஜிமா நகரை, 4 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக ஜப்பான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. அப்பகுதியில் உள்ள அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டது.
உதவி மையம்
நம் நாட்டிலிருந்து பலர் கல்வி, வேலைக்காக ஜப்பானில் வசிப்பதால், இங்குள்ள அவர்களது குடும்பத்தினர் அச்சம்அடைந்தனர்.
எனவே ஜப்பானில் உள்ள இந்திய துாதரகம் அவசர உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.


ஜப்பானில் நில நடுக்கும் என்பது புதிதல்ல அவ்வப்போது நில நடுக்கம் வந்து போவது சாதாரணமான ஒரு நிகழ்வு தான்