நூற்றாண்டுக்கால வரலாறும்.. சட்டப் போராட்டங்களும்!
கோயில் தரப்பு தாக்கல் செய்த இந்த வழக்கில், 1923 ஆகஸ்ட் 25 அன்று மதுரை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெல்லித் தோப்பு, அங்குள்ள அனைத்துப் பொருள்கள், மலை உச்சிக்குச் செல்லும் படிக்கட்டுகள், புதிய மண்டபம் மற்றும் “மசூதியும் கொடிமரமும் அமைந்துள்ள மலை உச்சிப் பகுதி முழுவதற்கும்” தர்காதான் உரிமையாளர் என்று அறிவிக்கப்பட்டது. மசூதியானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தர்கா உரிமையாளர்களின் பிரத்யேக உடைமையில் இருந்ததாக நீதிமன்றம் பதிவு செய்தது.
உயர் நீதிமன்றம் மற்றும் அரசு அப்பீல்களுக்குப் பிறகு, 5 நீதிபதிகள் கொண்ட பிரிவி கவுன்சில் 1931 மே 12 அன்று பிறப்பித்த தீர்ப்பில், சார்பு நீதிமன்றத்தின் 1923 தீர்ப்பை மீண்டும் நிலைநிறுத்தியது. இந்தத் தீர்ப்பு இறுதி வடிவம் பெற்று இரு தரப்பையும் கட்டுப்படுத்துகிறது.
கார்த்திகை தீபம் பாரம்பர்யமான இடத்தில் மட்டுமே (வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில்) தேவஸ்தானத்தால் ஏற்றப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் வேறு எங்கு தீபம் ஏற்ற வேண்டுமானாலும் அறநிலையத்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், அது தர்கா, படிக்கட்டுகள் மற்றும் நெல்லித் தோப்பிலிருந்து குறைந்தது 15 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மலை உச்சியில் அல்லது “குதிரை சுனை’ அருகில் தீபம் ஏற்றக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மற்றும் மேல்முறையீடுகள் 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டன. குதிரை சுனையில் எந்த ஆண்டிலும் தீபம் ஏற்றப்பட்டதில்லை என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
தர்காவில் பாரம்பர்யமாக நடந்து வந்த விலங்கு பலிக்கு எதிரான வழக்கில், 2025 அக்டோபர் 10 அன்று தீர்ப்பளித்த தனி நீதிபதி, தர்கா பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், உரிய உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அங்கே விலங்கு பலியிடவோ, சமையல் செய்யவோ அல்லது அசைவ உணவுகளைக் கொண்டு செல்லவோ அனுமதி இல்லை என்று உத்தரவிட்டார்.
தற்போதைய சர்ச்சையும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளும்
2025 அக்டோபரில், முருகன் பக்தர் என்றறியப்படும் ராம ரவிகுமார் என்பவர் மலை உச்சியில் உள்ள கல் தூணில் (தீபத்தூண்) கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி விண்ணப்பித்தார். கோயில் நிர்வாகம் பாரம்பர்ய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில்தான் தீபம் ஏற்றப்படும் என்று கூறி அதனை நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், தர்காவை முறையாக விசாரிக்காமல், 2025 டிசம்பர் 1 அன்று தனி நீதிபதி தீர்ப்பளித்தார். கல் தூண் அமைந்துள்ள பகுதி 50 மீட்டர் தள்ளி இருப்பதால் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்று கூறி அங்கு தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
