உங்கள் கணவரோ அல்லது மனைவியோ, “நம்ம ரெண்டு பேரும் நம்ம செல்போன்களை மாற்றிக்கொள்வோம். உன்னுடைய போனை நான் பார்க்கிறேன்; என்னுடைய போனை நீ பார்” என்று திடீரெனக் கேட்டால், எந்தப் பதற்றமும் இல்லாமல் உங்கள் செல்போனைக் கொடுத்துவிடுவீர்களா?
அப்படிக் கொடுப்பதுதான் உண்மையான அன்புக்கும் நம்பிக்கைக்கும் அடையாளமா? கணவன் அல்லது மனைவி என்பதால், மற்றொருவரின் செல்போனைச் சோதித்துப் பார்க்க முழு உரிமை இருக்கிறதா?
ஒருவர் விருப்பத்துடன் தனது செல்போனை மற்றொருவரிடம் கொடுத்துப் பயன்படுத்த அனுமதிப்பது வேறு; அந்த அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களைப் பார்ப்பது அல்லது பதிவிறக்கம் செய்வது வேறு. இந்த இரண்டுக்கும் சட்டரீதியாக ஒரே அணுகுமுறை கிடையாது. ஒருவர் தன்னுடைய செல்போனைக் கொடுக்க மறுத்தால், அது சட்டப்படி தவறா?
திருமண உறவிலும் தனியுரிமை (Privacy) என்பது ஒருவருக்கு இருக்கிறதா? கணவன் – மனைவியின் செல்போனை அனுமதியின்றிச் சோதிப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?
தெரிந்துகொள்வோம்.
திருமணமானாலும் தனியுரிமை உண்டு!
திருமணம் செய்துகொண்டதால் ஒருவருடைய தனிப்பட்ட உரிமைகள் அனைத்தும் மற்றொருவருக்குச் சென்றுவிடாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாகத் தனியுரிமையும் பாதுகாக்கப்படுகிறது.
இதில் செல்போனும் அடங்கும். ஒருவருடைய தனிப்பட்ட மெசேஜ்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், அழைப்புப் பதிவுகள் போன்றவற்றை அவருடைய அனுமதியின்றி ரகசியமாகப் பார்ப்பதற்கு, கணவன் அல்லது மனைவி என்ற உறவு மட்டும் உரிமை அளித்துவிடாது.
மேலும், ஒருவர் தனது செல்போனை மற்றொருவரிடம் கொடுக்க மறுப்பது மட்டுமே தவறான செயலாகவோ, திருமண உறவில் நம்பிக்கையின்மைக்கான ஆதாரமாகவோ கருதப்பட முடியாது.
நீதிமன்றம் சொல்வது என்ன?
இதுதொடர்பாக, 2024-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. விவாகரத்து வழக்கில், மனைவியின் செல்போன் மற்றும் சிம் கார்டு சிறிது நேரம் தனது வசம் இருந்தபோது, கணவர் அந்தச் செல்போனுக்கு வந்த OTP-ஐப் பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனமான Jio-வின் இணையதளம் வழியாக மனைவியின் அழைப்புப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கணவர் மனைவியின் அனுமதியின்றி ரகசியமாகப் பெற்ற அழைப்புப் பதிவுகள் அவரது தனியுரிமையை மீறுவதாகக் குறிப்பிட்டார். மேலும், அத்தகைய மின்னணு ஆதாரத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான சான்றிதழும் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். திருமண உறவிலும் தனியுரிமை உரிமை உண்டு என்றும், தனியுரிமையை மீறிப் பெறப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
