யார் இந்த வளமான பிரிவினர்? ஓபிசி வகுப்பினரில் உள்ள வளமான பிரிவினரை கண்டறிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 1993ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, வளமான பிரிவினருக்கான வருமான வரம்பை கணக்கிடும் போது பெற்றோரின் ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டது. மேலும், பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சமாகவும் நிர்ணயத்தது. இந்த வரம்பு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, பெற்றோரது ஆண்டு வருமான ரூ.8 லட்சத்துக்குள் இருத்தால் ஓபிசி (வளமற்ற பிரிவினர்) சாதி சான்றிதழ் கிடைக்கும். 8 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் ஒபிசி வளமான பிரிவினர் என்ற சாதி சான்றிதழ் கிடைக்கும்.
சுருக்கமாக: பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது. மேலும், அரசுப் பணியில் உள்ளவர்களின் பதவியின் தகுதியை மட்டுமே (குரூப் ஏ, பி, சி, டி) கணக்கில் கொண்டு கிரீமி லேயர் தீர்மானிக்கப்பட வேண்டும். அப்போது, ஊதிய வருமானமும், விவசாயத்தில் கிடைக்கும் வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது.
குழப்பத்தை ஏற்படுத்திய 2004ம் ஆண்டு தெளிவுரை: இந்நிலையில்,2004-ஆம் ஆண்டில் மத்திய பணியாளர் அமைச்சகம் கிரிமிலேயர் தொடர்பான ஒரு தெளிவுரைச் சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், அரசுப் பதவிக்கு நிகரான நிலை நிர்ணயிக்கப்படாத தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, அவர்களின் பெற்றோரின் ‘ஊதிய வருமானத்தை’ அடிப்படையாக கொண்டு கிரிமிலேயர் கணக்கிடப்படும் என்று தெளிவுபடுத்தியது. இதன்படி, ஊதிய வருமான ரூ.8 லட்சத்தை தாண்டினால் வளமான பிரிவினராக கொள்ளப்படுவர். இதில், மாபெரும் முரண்பாடும் காணப்பட்ட்டது.
அதாவது, அரசின் கீழுள்ள குரூப் டி பணியங்களில் பணிபுரிந்தால் அவரின் ஊதிய வருமானமும், வேளாண்மை வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. உதாரணமாக, அவரது ஊதிய வருமானாக ரூ.50 லட்சமாக இருந்தாலும், விவாசாயத்தில் இருந்து பெறக்கூடிய வருமானம் ₹1 கோடியாக இருந்தாலும் அவர்கள் வளமான பிரிவினராக கருதப்பட மாட்டார்கள். ஆனால், பொதுத் துறை வங்கி அல்லது தனியார் துறைகளில் பணிபுரியும் பெற்றோரது ஆண்டு ஊதிய வருமானம் ₹8 லட்சத்தை தாண்டினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டது.
இந்த 2004-ஆம் ஆண்டின் நெறிமுறை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமல்படுத்தப்படவில்லை. 2016ல் இருந்து தான் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால், 2016-ஆம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 100 ஓபிசி மாணவர்களின் இடஒதுக்கீடு உரிமைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்களின் பணி நியமனம் முடங்கியது.
இச்ச்சூழலில் தான், இந்தாண்டு மார்ச் மாதம் ‘யூனியன் ஆஃப் இந்தியா எதிர் ரோஹித் நாதன்’ வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், பெற்றோரின் பணியடைகளை (Posts) கணக்கில் கொள்ளாமல், வெறும் ஊதிய வருமானத்தை மட்டுமே வைத்துத் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது அப்பட்டமான பாகுபாடு ஆகும் என உச்சநீதிமன்றம் கண்டித்தது. பெற்றோரின் சம்பளம் அல்லது வருமானம் மட்டுமே கிரீமி லேயரைத் தீர்மானிக்கும் அளவுகோல் அல்ல என்றும், 1993-ஆம் ஆண்டின் விதியின்படி பதவியின் தகுதியையும் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இத்தீர்ப்பை பணியடைகளை (Posts)அமல்படுத்த மத்திய அரசுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது
இத்தீர்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தினால், ஏற்கனவே பணி நியமனம் பெற்ற பிற ஊழியர்களுக்குப் பாதிப்பும், நிர்வாக ரீதியாகப் பெரும் குழப்பமும் ஏற்படும் எனக் கூறி, ஆகஸ்ட் 24 அன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து விலக்கு கோரியது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மார்ச் 11 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளிப்போடவோ அல்லது ரத்து செய்யவோ எந்தவித நியாயமான காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.இருப்பினும், இத்தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு மேலும் 2 மாதங்கள் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது
இத்தீர்ப்பின் மூலம், 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 958 வேட்பாளர்கள் மற்றும் இந்திய வனப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 148 வேட்பாளர்களுக்கான பணி ஒதுக்கீடும், 2016 முதல் பாதிக்கப்பட்ட சுமார் 100 ஓபிசி அதிகாரிகளுக்கான பணி நியமனமும் தடையின்றி நடைபெற வழிவகுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2017-ஆம் ஆண்டுக்குப்பின் கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள கிரீமி லேயர் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
